வின்சர் அரண்மனை
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) வின்ட்சர் கோட்டை கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
வின்சர் அரண்மனை | |
---|---|
வின்சர், பேர்க்சயர் இங்கிலாந்து | |
நீண்ட பாதையில் இருந்து ஒரு தோற்றம் | |
பேர்க்சயரில் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 51°29′0″N 00°36′15″W / 51.48333°N 0.60417°W |
வகை | ஒரு வட்டமான அரணுடன் கூடிய மூன்று bailey wards |
இடத் தகவல் | |
உரிமையாளர் | அரசி இரண்டாம் எலிசபெத் |
நடத்துபவர் | அரச குடும்பம் |
மக்கள் அனுமதி |
வரையறுக்கப்பட்ட அணுக்கம் |
இட வரலாறு | |
பயன்பாட்டுக் காலம் |
பிந்திய 11 ஆம் நூற்றாண்டு – தற்காலம் |
கட்டிடப் பொருள் |
Bagshot Heath கற்கள் |
நிகழ்வுகள் | முதல் பாரனின் போர், ஆங்கில உள்நாட்டுப் போர் |
அலுவல் பெயர் | வின்சர் அரண்மனை |
உசாவு எண் | 1006996[1] |
பட்டியலிட்ட கட்டிடம் – Grade I | |
அலுவல் பெயர் | மதிலுக்குள் அமைந்த கட்டிடங்கள் உள்ளிட்ட வின்சர் அரண்மனை |
தெரியப்பட்டது | 2 அக்டோபர் 1975 |
உசாவு எண் | 1117776[2] |
அலுவல் பெயர் | வின்சர் அரண்மனையும் பூங்காவும் |
தெரியப்பட்டது | 31 ஆகத்து 1999 |
உசாவு எண் | 1001434[3] |
Part of | அரச எஸ்டேட், வின்சர் |
வின்சர் அரண்மனை (Windsor Castle) ஆங்கிலக் கவுன்டியான பேர்க்சயரின் வின்சரில் அமைந்துள்ள அரச மனை ஆகும். இங்கிலாந்து, பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் இவ்வரண்மனை கொண்டுள்ள நீண்ட தொடர்பினாலும், கட்டிடக்கலையாலும் இது குறிப்பிடத் தக்கதாக விளங்குகின்றது. முதல் அரண்மனை 11 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் மீதான நார்மன் படையெடுப்புக்குப் பின்னர் வெற்றியாளன் வில்லியம் என அழைக்கப்படும் முதலாம் வில்லியத்தால் கட்டப்பட்டது. முதலாம் என்றியின் காலத்தில் இருந்து இது ஆட்சியில் இருக்கும் அரசர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் பயன்பாட்டில் உள்ள அரச மாளிகை என்னும் பெருமையும் இதற்கு உண்டு. இந்த மாளிகையின் பகட்டான அறைகளின் தொகுதி பற்றி விபரித்த கலை வரலாற்றாளரான இயூ ராபர்ட், "ஒரு உயர்வானதும், நிகரில்லாததுமான அறைகளின் தொடர் மிகச் சிறப்பானதும் ஆகக்கூடிய அளவு முழுமையானதுமான பிந்திய ஜார்ஜிய இரசனையின் வெளிப்பாடு என பரவலாகக் கருதப்படுகிறது."[4] என்றார். அரண்மனைச் சுவர்களுக்கு உள்ளே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென் ஜார்ஜ் சிற்றாலயம் உள்ளது. வரலாற்றாளர் யோன் மார்ட்டின் ராபின்சனின் கருத்துப்படி இது ஆங்கில நிலைக்குத்து கோதிக் வடிவமைப்பின் உயரிய சாதனை ஆகும்.[5]
தொடக்கத்தில், இலண்டனின் புறப் பகுதிகளில் நார்மன்களின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கவும், தேம்சு ஆற்றின் முக்கிய பகுதியைக் கண்காணிக்கவும் கூடியதாக மண் அரண்களுடனும், பாதுகாப்பு வெளிகளுடனும் வடிவமைக்கப்பட்டது. படிப்படியாகக் கற்சுவர்களாக மாற்றப்பட்ட இதன் அரண்கள், 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இடம்பெற்ற முதல் பாரனின் போரின்போது இடப்பட்ட நீண்ட முற்றுகையை வெற்றிகரமாகச் சமாளித்தன. அந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் மூன்றாம் என்றி ஒரு ஆடம்பர அரச மாளிகையை இதன் சுவர்களுக்குள் கட்டினார். மூன்றாம் எட்வார்டு மேலும் ஒருபடி மேலே சென்று கூடுதலான ஆடம்பரமாக அம்மாளிகையை மீளக் கட்டினார். இது முழு மத்திய காலத்திலும் இங்கிலாந்தில் கட்டப்பட்ட செலவு கூடிய மதச் சார்பற்ற கட்டிடமாக விளங்கியது. எட்வார்டின் மைய வடிவமைப்பு டியூடர் காலம் வரை நிலைத்திருந்தது. அக்காலத்தில், எட்டாம் என்றியும், முதலாம் எலிசபெத்தும் இம்மாளிகையை அரச அவையாகவும், இராசதந்திரக் கேளிக்கைகளுக்கான மையமாகவும் பயன்படுத்தினர்.
ஆங்கில உள்நாட்டுப் போரின்போது நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையிலும் வின்சர் அரண்மனை தப்பிப் பிழைத்தது. அக்காலத்தில் அது நாடாளு மன்றப் படைகளின் இராணுவத் தலைமை இடமாகவும், முதலாம் சார்லசின் சிறையாகவும் பயன்பட்டது. 1660 இல் முடியாட்சி மீள்விக்கப்பட்ட பின்னர், வின்சர் அரண்மனையின் பெரும் பகுதியை இரண்டாம் சார்லசு, கட்டிடக்கலைஞர் இயூ மே என்பவரின் உதவியுடன் மீளக் கட்டினார். இம்மீளமைப்பின்போது, பெருஞ்செலவில் பரோக் பாணியிலான ஒரு தொகுதி உள்ளக அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை இன்றும் பார்ப்போரைக் கவரக்கூடியவையாக உள்ளன. சிறிது காலப் புறக்கணிப்புக்குப் பின்னர், 18 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ் ஆகியோர் இரண்டான் சார்லசின் மாளிகையைப் பெருஞ் செலவில் மீளக் கட்டினர். இதுவே, ரோக்கோக்கோ, கோதிக், பரோக் தளவாடங்கள் நிறைந்த தற்கால அரச அறைத் தொகுதியின் வடிவமைப்பை உருவாக்கியது. அரசி விக்டோரியாவும், அரண்மனையில் சில சிறிய மாற்றங்களைச் செய்தார். அரசி விக்டோரியாவில் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியில் இது ஒரு அரச கேளிக்கை மையமாக விளங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Windsor Castle, Historic England. Retrieved 8 August 2017.
- ↑ Windsor Castle Including all the Buildings Within the Walls, Historic England. Retrieved 8 August 2017.
- ↑ The Royal Estate, Windsor: Windsor Castle and Home Park, Historic England. Retrieved 8 August 2017.
- ↑ Hugh Roberts, Options Report for Windsor Castle, cited Nicolson, p. 79.
- ↑ Robinson, p. 27.